குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவோருக்கு சிறை தண்டனை, அபராதம் அதிகரிப்பு-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவோருக்கு சிறை தண்டனை, அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்ததாவது:குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க, தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 14 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களையும் அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை தடை செய்யும் வகையில், சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

குடும்ப பாரம்பரிய தொழில்கள், சினிமா, சீரியல், விளம்பரங்கள் போன்ற பொழுது போக்கு சார்ந்த பணிகள், பிற விளையாட்டுத்துறைகளில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன், 14 வயதுக்கு உட்பட்டவர்களை ஈடுபடுத்தவும், மற்ற பணிகளில் ஈடுபடுத்துவதை தடுக்கவும் சட்டத்தில் இடம் உண்டு.விவசாயம், கைவினைத் தொழில் போன்றவற்றில் ஈடுபடும் பெற்றோருக்கு, பள்ளி நேரத்திற்கு பிறகு அல்லது விடுமுறை நாட்களில் அவர்களுடைய குழந்தைகள் உதவலாம். பாரம்பரிய தொழிலின் அடிப்படையை குழந்தைகள் அறிந்து கொள்ள விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

ஆனாலும், குடும்ப பாரம்பரிய தொழிலாக அபாயகரமான தொழில்கள் இருந்தால், அதில் தங்களுடைய குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது. குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால், பிடிவாரண்டு இல்லாமல் கைது செய்து, ₹50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.மேலும், 16 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களை அபாயகரமான வேலைகள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்தும் பெற்றோருக்கு தண்டனை கிடையாது. ஆனால், இரண்டாவது முறையாகவோ அல்லது தொடர்ந்தோ ஈடுபடுத்தினால், அதிகபட்சமாக ₹10 ஆயிரம் விதிக்கப்படும்.

முதல் முறையாக குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால், குறைந்தபட்ச தண்டனையான 3 மாதத்திலிருந்து 6 மாதமாகவும், அதிகபட்ச தண்டனையான 6 மாதத்தில் இருந்து 2 ஆண்டுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், ₹10 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை விதிக்கப்பட்ட அபராதம், தற்போது ₹20 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை உயர்த்தப்படுகிறது. 2வது முறையாக, குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால் 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை என்றிருந்ததை, ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க, குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளார் மறுவாழ்வு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *