ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக் கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக் கோரியும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினர், அரசு, தனியார் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். நாட்டு மாடுகளைக் காப்போம். ஏறு தழுவுதலை மீட்போம் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.

இதனிடையே, இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை எம்எல்ஏவுமான எ.வ.வேலு ஆதரவு தெரிவித்தார்.
வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்: திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, கல்லூரி எதிரே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் அன்பரசன், மாவட்டத் தலைவர் பிரகாஷ், மாநிலக்குழு உறுப்பினர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு:
திருவண்ணாமலை வழக்குரைஞர்கள் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆதரவாக தாங்களும் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

கீழ்பென்னாத்தூரில்…: கீழ்பென்னாத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரி பேரணியாகச் சென்றனர். கருப்புக் கொடிகளை கையில் ஏந்தியபடி கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் எதிரில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை இளைஞர்கள் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், அங்கு சிறிது நேரம் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பிய இளைஞர்கள், கலைந்து சென்றனர்.

ஆரணி: ஆரணி அண்ணா சிலை அருகில் புதன்கிழமை காலை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், பஜார் வீதி வழியாக ஊர்வலமாக ஆரணி கோட்டை மைதானத்துக்கு சென்று, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஆரணியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள், தச்சூர் அரசுப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆரணி பகுதியிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஊர்வலமாக வந்து கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம் ஆதரவு தெரிவித்தார். பின்னர், மாணவர்கள், இளைஞர்கள் இரவு வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திவ்யா கல்லூரி: இதேபோல, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி, சேத்துப்பட்டு திவ்யா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 1,000-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகம் முதல் செஞ்சி சாலை வரை மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தவாசி: வந்தவாசி பகுதி இளைஞர்கள் சார்பில் வந்தவாசி தேரடி அஞ்சல் அலுவலகம் முன் புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சென்னாவரம் சுரேஷ், பாரூக்பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து, புதன்கிழமை மாலை வியாபாரிகள் சங்கங்கள், ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. பின்னர், அங்கிருந்து தேரடி வழியாக யாதவர் தெரு சந்திப்பு வரை ஊர்வலமாகச் சென்று, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், வந்தவாசியில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம், நூர்முகமது, வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகி அஸ்கர்அலி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் நித்தியானந்தம், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்யாறு: செய்யாறில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் என நூற்றுக்கணக்கானோர் கல்லூரிப் பகுதிகளில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, ஆற்காடு சாலை வழியாக செய்யாறு சார் – ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தடைந்தனர். பின்னர், சார் – ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆரணி கூட்டுச்சாலை அருகேயுள்ள இந்திரா காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போளூர்: போளூரில் வேலூர் – திருவண்ணாமலை சாலை அருகே முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சாதுஆனந்த் தலைமையில், போளூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *